Search This Blog

Followers

Thursday, September 26, 2019

தொல்தமிழ் மக்களும் இறைநம்பிக்கையும்!

தொல்தமிழ் மக்களும் இறைநம்பிக்கையும்!

கீழடியில் இதுவரை நடைபெற்றிருக்கும் 4 கட்ட அகழாய்வுகளில் கிடைத்திருக்கும் தொல்பொருள்கள், தமிழரின் மூவாயிரமாண்டு மூத்த தமிழ் நாகரிகத்தின் மேன்மையை உரக்கப்பேசுவதற்கு வழிகோலியிருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், ஆராய்வதற்கென்று முடிவுசெய்யப்பட்ட 110 ஏக்கரில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றிருப்பதோ வெறும் 10 சதவீதத்துக்கும் குறைவான இடமே (அதற்கே ஆயிரம் இடைஞ்சல்கள்!).  :-(

அதற்குள் ஒரு கூட்டம், ”அன்று வாழ்ந்த தமிழ் மக்களிடம் இறைநம்பிக்கையே கிடையாது; அவர்கள் அனைவரும் இறை மறுப்பாளர்கள் என்று கீழடி நிரூபித்துவிட்டது” என இங்கும் அங்கும் ஓடிக் காமெடி செய்துகொண்டிருக்கின்றது. 😂

இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் சிந்துவெளி நாகரிகத்தை (Indus Valley Civilization) ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற பகுதிகளில் அகழ்ந்து ஆராய்ந்தபோது யோகத்தில் அமர்ந்திருக்கும் மனிதனின் உருவம் மூன்று தலைகளுடன் கிடைக்கப்பெற்றதும், அதனைப் ’பசுபதி’ (One of Lord Siva’s epithets) என்ற இறை உருவமாகக் கருதலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். சிந்துவெளி நாகரிகத்தை நாம் தமிழ்/திராவிட நாகரிகம் என்று கருதும்பட்சத்தில் அப்போதிலிருந்தே திராவிடர்களிடம் இறைநம்பிக்கை இருந்தது என்பதற்கான அடையாளம் தானே இவ் உருவம்?

அது ஒருபுறம் இருக்கட்டும்!

நம் தமிழர்களின் வாழ்வியலை (சங்கநூல்கள் வழி) சிறிது ஆராய்வோம்!

மலைப்பகுதிகளில் வாழ்ந்த தொல்குடி மக்கள், காலையும் மாலையும் மலையில் தோன்றிய கதிரவனின் செம்மை அழகில் ஈடுபட்டு அதனைச் ’சேய்’ (சேய் என்ற சொல் இங்கே சிவப்பைக் குறிக்கும்; மகனையன்று!) என்று போற்றினர். அந்த அழகையே ’முருகு’ (அழகு) என்று கொண்டாடினர். அந்தத் தெய்வத்தன்மை வாய்ந்த அழகை, ’முருகன்’ என்று பெயரிட்டு வணங்கினர் என்கிறார் தமிழ்த்தென்றல் திரு.வி.க., தம்முடைய ’முருகன் அல்லது அழகு’ எனும் நூலில். (எனவே நம் முப்பாட்டனாக இருக்க முருகன் தகுதியானவனே!) 👍

காட்டுப்பகுதியில் (முல்லை) வாழ்ந்த மக்கள், எங்கும் விரிந்திருந்த அடர்பசுமையைக் கண்டு, தங்கள் தெய்வம் கருமையானது என்று கருதி அவனுக்கு ’மாயோன்’ என்று பெயர்சூட்டி வணங்கினர்.

நிலப்பகுதியாகிய மருதத்தில் வாழ்ந்தோர், நல்வினை செய்தவர்களின் உயிர்கள் இறந்தபின் மேலுலகத்திற்குச் செல்லுமென்றும், மருதநிலத்தில் அரசனாயிருந்தவன் மறுமையில் மேலுலகத்திலும் அரசனாவான் என்று கருதி முதன்முதல் இறந்த அரசனையே வேந்தன் என்று பெயரிட்டு வணங்கினார்கள். மழை மேலிருந்து பெய்வதால், மேலுலக வேந்தனாகிய தங்கள் தெய்வத்தினிடமிருந்தே அது வருவதாகக் கருதி, மழைவளத்திற்காகவும் அவனை வழிபட்டார்கள். (இவனே ’இந்திரன்’ என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருக்கிறான் என்று கொள்ளலாம்.)

அதுபோலவே நெய்தல் நிலப்பகுதிக்கு வாரணன் (கடலோன்) தெய்வமாகக் கருதப்பட்டான். கடல்மீனாகிய சுறாவின் முதுகெலும்பு அவனுக்குரிய அடையாளமாகக் கொள்ளப்பட்டது. பரதவர்கள் சுறாக்கொம்பை மணலில் நட்டு வழிபாடு செய்ததைப் ’பட்டினப்பாலை’ பேசுகிறது.

…வீழ்த்தாழைத் தாள் தாழ்ந்த
வெண்கூதாளத்துத் தண்பூங் கோதையர்
சினைச் சுறவின் கோடுநட்டு
மனைச் சேர்த்திய வல்அணங்கினான்…” (பட்டினப்பாலை: 84-87)

இந்த வாரணனே பின்பு வருணன் என்று வடமொழியில் பெயர்மாற்றம் பெற்றான் என்கிறார் பாவாணர். (இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ’உறைக்கிணறு’ குறித்தும் பட்டினப்பாலை பேசுகின்றது.)

பரந்த பாலைவெளியின் தெய்வமாகக் கொற்றவை கருதப்பட்டாள். பாலைநில மாந்தராகிய கள்ளர் மறவருக்கு, அவரது போர்த் தொழிலில் வெற்றியைத் தருபவள்  தாய்த் தெய்வமான இக் கொற்றவை. எனவே அவளை வணங்கி வழிபட்டார்கள் அவர்கள். கொற்றவை வழிபாட்டைச் சிலப்பதிகார ’வேட்டுவ வரி’யில் விரிவாகக் காணலாம்.

இவைபோன்ற திணைத் தெய்வ வழிபாடுகள் அல்லாமல் இறந்துபோன மூத்தோரை வழிபடுதல், போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் பீடும் பெயரும் எழுதி நடப்பட்ட நடுகல்லை வழிபடுதல் போன்றவையும் அன்று புழக்கத்தில் இருந்தவையே. (நடுகற்கள் பல இப்போதும் காணக் கிடைக்கின்றன.)

என்ன ஒன்று…இன்று நாம் இறைவழிபாட்டுக்குத் தருகின்ற ’அதீத’ முக்கியத்துவத்தை அன்றைய மக்கள் தரவில்லை. அதனால்தான் தெய்வத்தை ’முதற்பொருளாக’க் கொள்ளாமல், நிலத்துக்குரிய ’கருப்பொருள்கள்’ வரிசையில் ஏழோடு எட்டாகச் சேர்த்தார் தொல்காப்பியர்.

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப. (தொல்-பொருள்: நூ:20)

எனவே அன்றைய தமிழக மக்களின் வாழ்வியலை நாம் ஓரளவுக்கேனும் அறிந்துகொள்ள வேண்டுமானால்கூட அதற்குக் கீழடி அகழ்வாராய்ச்சி மட்டும் போதாது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் குறிப்பாக மக்களின் வாழ்விடங்களில் (Habitats not burial sites) தொடர் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற வேண்டும்!

So, my dear friends and countrymen! with the very small amount of excavating done in Keezhadi, coming to the conclusion that Tamil people back in those days, had no belief in God is similar to the blind men’s description of an elephant! That’s it! 😁

No comments: