Search This Blog

Followers

Thursday, September 26, 2019

கலம் செய் கோவே!!

"ஆதிச்சநல்லூர் கலம் செய் கோவே ....."

"கலம் செய் கோவே! கலம் செய் கோவே!

அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய

சிறு வெண் பல்லி போலத் தன்னொடு

சுரம் பல வந்த எமக்கும் அருளி,

வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி

அகலிதாக வனைமோ" (புறநானூறு 256)

போரிலே கணவன் இறந்துவிடுகிறான். அவனை அடக்கம் செய்ய,  குயவன் ஈமத்தாழி செய்யப் போகிறான். அவனைப் பார்த்து, இறந்துபோன வீரனின் மனைவி, “தாழியை அகலமாக செய்யுங்கள், அவர் உடலுடன் சேர்ந்து என் உடலும் ஒன்றாக அடக்கம் செய்யப்படவேண்டும்” என்கிறாள்.

இது புறநானூறு காட்டும் காட்சி.  இது போன்ற இலக்கியங்கள் வேறு மொழிகளில் உள்ளனவா என்று தெரியவில்லை.

தாழியில் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் சங்க காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பதைப் பல்வேறு அகழ்வாய்வுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

கடந்த, 2004-06 ஆம் ஆண்டுகளில், ஆதிச்சநல்லூரில், பேரா.சத்தியமூர்த்தி தலைமையில், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ARCHAEOLOGICAL SURVEY OF INDIA) நடத்திய அகழ்வாய்வின்போது 169 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் தாழி எண் 58 மற்றும் தாழி எண் 104, இவற்றிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், இவை முறையே கி.மு. 696-540 மற்றும் கி.மு. 905-806  ஆண்டுகளைச் சேர்ந்தவை என்று, கடந்த மார்ச் மாதம் அமரிக்காவில் ஃப்ளோரிடா உள்ள Beta Analytic Testing Laboratotires இல் நடந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

(https://www.thenewsminute.com/article/carbon-dating-proves-adichanallur-relics-905-696-bc-madras-hc-slams-asi-99557)

இதற்கிடையே,, கேன்பெர்ராவில் உள்ள Australian National University யைச் சேர்ந்த, பத்மநாதன் ராகவன் எனும் Bio anthropologist, இந்தத் தாழிகளில் உள்ள எலும்புக் கூடுகள் 3800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறியிருக்கிறார். இந்த செய்தி, Skeletons dating back 3,800 years throw light on evolution எனும் தலைப்பில் 01.01.2006 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது.
(https://timesofindia.indiatimes.com/home/science/Skeletons-dating-back-3800-years-throw-light-on-evolution/articleshow/1354201.cms)

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் ஊர் குயவர் பெருமக்கள் எவ்வளவு அழகாகத்  தாழிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இந்தக் கலை வளர எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்.
இது எப்போது தோன்றியிருக்கும்.

வாழும் நாளெல்லாம் தன கணவனோடு சேர்ந்து வாழ்ந்த நம் மகளிர் சாவிலும் அவனோடு சேர்ந்து செல்ல ஆசைப் பட்டிருக்கிறார்களே, இந்த பண்பாடு , நம் தமிழ்ப் பண்பாடு எவ்வளவு உயர்ந்து

நினைத்து நினைத்துப் பெருமைப் படலாமே.

தொன்மதுரை வைகை ஆற்று நாகரீகத்தின் மற்றுமோர் இடம்

தங்கமகள் கோதை -  வைகை ஆற்றங்கரையில் கிடைத்த தங்க கட்டிகள்;

கீழடியை போன்றே வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஊர், தேனூர்.

முதலாம் இராஜராஜ சோழன் கல்வெட்டும், சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து
கல்வெட்டும் சங்க இலக்கியமும் இந்த ஊரின் சிறப்பைப் பதிவு செய்கின்றன என
இலக்கிய, தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், அறிஞர்கள் யாரும்
ஆய்வுநடத்தாமல், தானாகவே வெளிவந்த சுயம்புவான கண்டுபிடிப்பு ஒன்று உண்டு.

தேனூரில் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த ஒரு கனமழையில்,
கருவேலமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. மரத்தின் தூருக்கு அடியில் இருந்து
ஒரு மண்முட்டி மேலெழுந்துவர, அதனை எடுத்து சிறுவர்கள் விளையாடத்
தொடங்கினார்கள். உள்ளே விரல் அளவு கனம் கொண்ட கட்டிகள் இருப்பது
தெரிந்ததும் விஷயம் பரவியது. அவை அத்தனையும் தங்கக்கட்டிகள். சுமார்
முக்கால் கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள்.

புதையல், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு அதிகாரி முதல்,
பொதுமக்கள் வரை எல்லோரும் பெரும் புதையல் என அந்தத் தங்கக் கட்டியை
நினைத்தனர். ஆனால் விலைமதிப்பில்லா புதையல் அந்தத் தங்கக் கட்டியில்
பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள்தான்(படத்தில் பார்க்க).

ஏழு தங்கக்கட்டிகளிலும் ''தமிழி'' எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
ஏழிழும் ஒரு பெண்ணின் பெயரே இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயர் 'போகுல் குன்றத்துக் கோதை’.
அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட விதத்தை வைத்து, இது கி.மு முதல்
நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தொல்பொருள் துறை மதிப்பிட்டுள்ளது.
(போகுல் குன்றத்துக் கோதை இதன் பொருள் போகுல் என்ற குன்றுப் பகுதியைச் சார்ந்த கோதை என்ற பெண்.)

இதில் அதிசயம் என்ன தெரியுமா? எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்கக்கட்டி,
இந்தியாவில் முதன்முதலில் இங்குதான் கிடைத்துள்ளது.

2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச்சிலைகள்கூட
இதுவரை கிடைக்கவில்லை. எந்தத் தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுதி,
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உருவ வழிபாடு தொடங்காத காலம் அது. எனவே சிலைகளுக்கோ, அல்லது அதுசார்ந்த
பெயர்களுக்கோ வாய்ப்பு இல்லை. ஆனால், அன்பும் காதலும் அப்படி அல்ல.
மனிதனின் ஆதி அணுத் துகளில் இருந்து தொடங்கியது. காலமானிகளால்
அளவிட்டுவிட முடியாத உணர்வுகளின் பரிணாமம். அதைப் போய் தனியாகக்
கண்டுபிடிக்கத் தேவை இல்லை, ஏனென்றால், நாமே அதன் கண்டுபிடிப்புதான்.
அதனால்தான் தெய்வத்தின் பெயரோ, அல்லது மன்னனின் பெயரோகூட தங்கத்தில்
எழுதப்படாத காலத்தில், ஆன்மிகமும் அதிகாரமும் எட்ட முடியாத எல்லையை,
அன்பினால் தோய்ந்த மனிதச் செயலால் எட்டித்தொட முடிந்துள்ளது, ஒரு
மனுஷிக்கு அவளை நேசித்த மற்றொருவரால் தரப்பட்ட, அல்லது அவளது பெயரை அவளே
விரும்பி எழுதிவைத்துக்கொண்ட ஒரு செயலாகக்கூட இது இருக்கலாம். ஆனால்,
இந்த எழுத்துக்குப் பின்னால் இருந்த நேசம், இத்தனை ஆயிரம்
வருடங்களுக்குப் பின்பும் நம் இதயத்தை ஏதோ செய்கிறது.தமிழகத்தின் முதல்
தங்கமகள் மட்டும் அல்ல, இந்தியாவின் முதல் தங்கமகளும் கோதைதான்.
மண்ணுக்குள் இருந்து சுயமாக உதித்தெழுந்தவர்களைப் பற்றி புராணங்களில்
படித்திருக்கிறோம். இதுவும் ஒரு சுயமான உதித்தெழுதல் தான்; ஒரு வகையில்
உயிர்த்தெழுதலும்கூட. எழுந்தவள் எழுப்பும் கேள்விகளும் எண்ணற்றவை.

2,100 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தைக் கண்டறிய பயன்படுத்திய
தொழில்நுட்பம் என்ன? அதை அணிகலனாக மாற்ற என்னென்ன வடிவத்தைக்
கையாண்டார்கள். கலைநுட்பமும் ரசவாதமும் கலந்து உருக்கொள்ளும் படைப்பின்
ரகசியத்தை எவ்வாறு கண்டறிந்தார்கள்? எழுத்தை எங்கும் நிறைந்த ஒன்றாக
எப்படி மாற்றினர்? கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

பாதுகாப்பு வசதிகள் பெரிதாக இல்லாத காலம் அது. அந்தக் காலத்தில்
வெளியூரில் இருந்து நகரத்துக்குள் வருகிறவர்களுக்கு, தங்களின் செல்வத்தை
நகருக்கு வெளியே அடையாளத்துடன் புதைத்துவைத்துவிட்டு உள்ளே வரும் பழக்கம்
இருந்துள்ளது. அத்தகைய பழக்கப்படி இந்தப் புதையல் வைக்கப்பட்டிருக்கலாம்.
அப்படியென்றால், நகரத்தைவிட்டு வெளியே கிராமங்களிலோ அல்லது
சிறுநகரங்களிலோ இருந்தவர்களிடமே, இவ்வளவு தங்கம் புழங்குகிற அளவுக்கு
பொருளாதாரச் செழிப்பு இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
கிராமப்புறத்திலே இவ்வளவு வளமை இருந்திருக்கும்போது, தலைநகரமான மதுரையின்
வளமை எப்படி இருந்திருக்கும்?

முதலில் ஞாபகம் வருவது அழகர்கோயில் கல்வெட்டு. அங்கே கி.மு மூன்றாம்
நூற்றாண்டில் சமணப் பள்ளி அமைக்க, மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் ஆதன்,
தானம் அளித்துள்ளான் எனச் செய்தி உள்ளது. இது மதுரை பொற்கொல்லர்களின்
உயர்வைக் காட்டுகிறது. சிலப்பதிகாரத்தின் கடைசிப் பகுதியில் 1,000
பொற்கொல்லர்களின் தலைகளைக் கொய்து, கண்ணகியைச் சாந்தப்படுத்தினான்
பாண்டிய வேந்தன் எனச் சொல்லப்படுகிறது. இது ஒரு படைப்பாளியின் கற்பனையாக
இருக்கலாம். ஆனால், பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் இங்கு
வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் சாட்சி இது.

தூத்துக்குடி கிறிசி மஹாலட்சுமி கல்லூரி மாணவர்கள் நடத்திய கள ஆய்வில்,
முக்காணி என்ற கிராமத்தில் இருக்கும் பொற்கொல்லர்கள் தங்களின்
குலக்கதையைச் சொல்லும்போது, 'மதுரையில் பெரும் எண்ணிக்கையில்
பொற்கொல்லர்கள் கொலைசெய்யப் பட்டபோது நாங்கள் உயிர் தப்பி இங்குவந்து
சேர்ந்தவர்கள்’ எனக் கூறியதாக கூறப்படுகிறது

இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் வாழ்வதற்கான தேவை இருந்த
நகரமாக மதுரை இருந்துள்ளது. அப்படியென்றால், அவ்வளவு வேலைப்பாடுகள்
செய்யத் தேவையான பொற்குவியல் இருந்துள்ளது என்பதை, யூகிப்பது கடினம்
அல்ல.

ஒரு கல்வெட்டு ஆதாரம், ஓர் இலக்கிய ஆதாரம், ஒரு வாய்மொழி வரலாற்று
ஆதாரம்... என ஒவ்வொன்றாகச் சேர்த்துக்கொண்டிருந்தால், கை நிறையத்
தங்கக்கட்டிகளோடு நம் முன்னால் வந்து நிற்கிறாள் கோதை. அவளின் கைகளில்
இருக்கும் மண் கலயத்திலேயே இவ்வளவு தங்கம் என்றால், மாமதுரைக்குள்
எவ்வளவோ?
சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பொருள் தேடி வட திசை சென்ற
தலைவன் வரத் தாமதமாவதால் கோபமான தலைவி, 'பாடலிபுரத்தில் எடுத்து சோணை
நதிக்கரையில் நந்த வம்சத்தினர் புதைத்துவைத்த புதையல் நம்மைவிட அதிக
செல்வத்தைக்கொண்டது என நினைத்துத் தேடிக்கொண்டிருக்கிறானோ?’ எனக்
கேட்கிறாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோணை நதிக்கரை நந்த
வம்சத்தினரின் புதையலுக்கு இலக்கியம் சான்று கூறுகிறது. வைகை நதிக்கரை
கோதை வம்சத்தின் புதையலுக்கு நாமே சான்றாக இருக்கிறோம்.

சாம்ராஜ்ஜியங்களை ஆண்ட பேரரசர்களின் பெயர்கள்கூட கல் எழுத்துக்குள்
பதுங்கியிருக்கும் நிலையில், சாமானியப் பெண்ணின் பெயர் ஒன்று, பொன்
எழுத்துகளால் பொறிக்கப்பட்டு இன்றும் மின்னுகிறது. அந்த மின்னும் ஒளியின்
வழியாக சிரித்துக்கொண்டே கோதை சொல்லும் செய்தி இதுதான்.

வைகை நதிக்கரை சங்கத் தமிழை மட்டும் வளர்க்கவில்லை, தங்கத் தமிழையும்
அதுதான் வளர்த்தது!

#செம்மொழிவாழ்க!

(நன்றி: தமிழக தகவல் திரட்டு பக்கம்)
=======================°===°===
இது குறித்த தினமலர் செய்தி 09.10.2013
(https://m.dinamalar.com/detail.php?id=822775)

மதுரை மாவட்டம், தேனூரில், 2009ல், செல்வம் என்பவரின் வீடு அருகில் இருந்த மரம், காற்றில் முறிந்து விழுந்தது. அதை அகற்றுகையில், மண் கலயத்திற்குள் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது. கலயத்திற்குள், 661 கிராம் எடையுள்ள, ஏழு தங்கக்கட்டிகள், 21 உத்தி ராட்ச மணிகள், மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள், 5.3 கிராம் எடையுள்ள டாலர் இருந்தன. அவை, மதுரை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. கலெக்டர் அறிவுறுத்தலின் படி, தங்கக் கட்டிகளை ஆய்வு செய்த, அரசு மியூசிய காப்பாட்சியர் கூறுகையில், 'ஏழு தங்கக் கட்டிகளிலும், தமிழ் பிராமி எழுத்து வடிவில், 'போகுல் குன்றக் கோதை' என, எழுதப்பட்டிருந்தது. இவை, 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்து. தற்போது, போகுல் என்ற வார்த்தை வழக்கொழிந்திருக்கலாம். குன்றம் என்பது, மலையைக் குறிக்கும்' என்றார்.

தொல்தமிழ் மக்களும் இறைநம்பிக்கையும்!

தொல்தமிழ் மக்களும் இறைநம்பிக்கையும்!

கீழடியில் இதுவரை நடைபெற்றிருக்கும் 4 கட்ட அகழாய்வுகளில் கிடைத்திருக்கும் தொல்பொருள்கள், தமிழரின் மூவாயிரமாண்டு மூத்த தமிழ் நாகரிகத்தின் மேன்மையை உரக்கப்பேசுவதற்கு வழிகோலியிருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், ஆராய்வதற்கென்று முடிவுசெய்யப்பட்ட 110 ஏக்கரில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றிருப்பதோ வெறும் 10 சதவீதத்துக்கும் குறைவான இடமே (அதற்கே ஆயிரம் இடைஞ்சல்கள்!).  :-(

அதற்குள் ஒரு கூட்டம், ”அன்று வாழ்ந்த தமிழ் மக்களிடம் இறைநம்பிக்கையே கிடையாது; அவர்கள் அனைவரும் இறை மறுப்பாளர்கள் என்று கீழடி நிரூபித்துவிட்டது” என இங்கும் அங்கும் ஓடிக் காமெடி செய்துகொண்டிருக்கின்றது. 😂

இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் சிந்துவெளி நாகரிகத்தை (Indus Valley Civilization) ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற பகுதிகளில் அகழ்ந்து ஆராய்ந்தபோது யோகத்தில் அமர்ந்திருக்கும் மனிதனின் உருவம் மூன்று தலைகளுடன் கிடைக்கப்பெற்றதும், அதனைப் ’பசுபதி’ (One of Lord Siva’s epithets) என்ற இறை உருவமாகக் கருதலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். சிந்துவெளி நாகரிகத்தை நாம் தமிழ்/திராவிட நாகரிகம் என்று கருதும்பட்சத்தில் அப்போதிலிருந்தே திராவிடர்களிடம் இறைநம்பிக்கை இருந்தது என்பதற்கான அடையாளம் தானே இவ் உருவம்?

அது ஒருபுறம் இருக்கட்டும்!

நம் தமிழர்களின் வாழ்வியலை (சங்கநூல்கள் வழி) சிறிது ஆராய்வோம்!

மலைப்பகுதிகளில் வாழ்ந்த தொல்குடி மக்கள், காலையும் மாலையும் மலையில் தோன்றிய கதிரவனின் செம்மை அழகில் ஈடுபட்டு அதனைச் ’சேய்’ (சேய் என்ற சொல் இங்கே சிவப்பைக் குறிக்கும்; மகனையன்று!) என்று போற்றினர். அந்த அழகையே ’முருகு’ (அழகு) என்று கொண்டாடினர். அந்தத் தெய்வத்தன்மை வாய்ந்த அழகை, ’முருகன்’ என்று பெயரிட்டு வணங்கினர் என்கிறார் தமிழ்த்தென்றல் திரு.வி.க., தம்முடைய ’முருகன் அல்லது அழகு’ எனும் நூலில். (எனவே நம் முப்பாட்டனாக இருக்க முருகன் தகுதியானவனே!) 👍

காட்டுப்பகுதியில் (முல்லை) வாழ்ந்த மக்கள், எங்கும் விரிந்திருந்த அடர்பசுமையைக் கண்டு, தங்கள் தெய்வம் கருமையானது என்று கருதி அவனுக்கு ’மாயோன்’ என்று பெயர்சூட்டி வணங்கினர்.

நிலப்பகுதியாகிய மருதத்தில் வாழ்ந்தோர், நல்வினை செய்தவர்களின் உயிர்கள் இறந்தபின் மேலுலகத்திற்குச் செல்லுமென்றும், மருதநிலத்தில் அரசனாயிருந்தவன் மறுமையில் மேலுலகத்திலும் அரசனாவான் என்று கருதி முதன்முதல் இறந்த அரசனையே வேந்தன் என்று பெயரிட்டு வணங்கினார்கள். மழை மேலிருந்து பெய்வதால், மேலுலக வேந்தனாகிய தங்கள் தெய்வத்தினிடமிருந்தே அது வருவதாகக் கருதி, மழைவளத்திற்காகவும் அவனை வழிபட்டார்கள். (இவனே ’இந்திரன்’ என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருக்கிறான் என்று கொள்ளலாம்.)

அதுபோலவே நெய்தல் நிலப்பகுதிக்கு வாரணன் (கடலோன்) தெய்வமாகக் கருதப்பட்டான். கடல்மீனாகிய சுறாவின் முதுகெலும்பு அவனுக்குரிய அடையாளமாகக் கொள்ளப்பட்டது. பரதவர்கள் சுறாக்கொம்பை மணலில் நட்டு வழிபாடு செய்ததைப் ’பட்டினப்பாலை’ பேசுகிறது.

…வீழ்த்தாழைத் தாள் தாழ்ந்த
வெண்கூதாளத்துத் தண்பூங் கோதையர்
சினைச் சுறவின் கோடுநட்டு
மனைச் சேர்த்திய வல்அணங்கினான்…” (பட்டினப்பாலை: 84-87)

இந்த வாரணனே பின்பு வருணன் என்று வடமொழியில் பெயர்மாற்றம் பெற்றான் என்கிறார் பாவாணர். (இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ’உறைக்கிணறு’ குறித்தும் பட்டினப்பாலை பேசுகின்றது.)

பரந்த பாலைவெளியின் தெய்வமாகக் கொற்றவை கருதப்பட்டாள். பாலைநில மாந்தராகிய கள்ளர் மறவருக்கு, அவரது போர்த் தொழிலில் வெற்றியைத் தருபவள்  தாய்த் தெய்வமான இக் கொற்றவை. எனவே அவளை வணங்கி வழிபட்டார்கள் அவர்கள். கொற்றவை வழிபாட்டைச் சிலப்பதிகார ’வேட்டுவ வரி’யில் விரிவாகக் காணலாம்.

இவைபோன்ற திணைத் தெய்வ வழிபாடுகள் அல்லாமல் இறந்துபோன மூத்தோரை வழிபடுதல், போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் பீடும் பெயரும் எழுதி நடப்பட்ட நடுகல்லை வழிபடுதல் போன்றவையும் அன்று புழக்கத்தில் இருந்தவையே. (நடுகற்கள் பல இப்போதும் காணக் கிடைக்கின்றன.)

என்ன ஒன்று…இன்று நாம் இறைவழிபாட்டுக்குத் தருகின்ற ’அதீத’ முக்கியத்துவத்தை அன்றைய மக்கள் தரவில்லை. அதனால்தான் தெய்வத்தை ’முதற்பொருளாக’க் கொள்ளாமல், நிலத்துக்குரிய ’கருப்பொருள்கள்’ வரிசையில் ஏழோடு எட்டாகச் சேர்த்தார் தொல்காப்பியர்.

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப. (தொல்-பொருள்: நூ:20)

எனவே அன்றைய தமிழக மக்களின் வாழ்வியலை நாம் ஓரளவுக்கேனும் அறிந்துகொள்ள வேண்டுமானால்கூட அதற்குக் கீழடி அகழ்வாராய்ச்சி மட்டும் போதாது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் குறிப்பாக மக்களின் வாழ்விடங்களில் (Habitats not burial sites) தொடர் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற வேண்டும்!

So, my dear friends and countrymen! with the very small amount of excavating done in Keezhadi, coming to the conclusion that Tamil people back in those days, had no belief in God is similar to the blind men’s description of an elephant! That’s it! 😁

Tuesday, September 24, 2019

தமிழும் திராவிடமும் ஒன்றா?!..ஓர் பார்வை

தமிழ் என்ற சொல்தான் திராவிடம் என்ற சொல்லின் வேர் - கவிஞர் மகுடேஸ்வரன்

திராவிடம் வேறு, தமிழ் வேறு என்று ஒரு வழக்கு கடுமையாக நடந்துகொண்டிருக்கிறது.

திராவிடம் என்ற சொல் பழைய தமிழ்நூல்களில் இல்லை என்போர் ஒரு தரப்பினர். தமிழ் என்ற சொல்லும்கூட முன்னைப்பழம் நூல்களில் அரிதிற்காணக்கூடிய நிலையில்தான் இருக்கிறது.

இவ்விரண்டு சொற்களும் ஒன்றா, வெவ்வேறா என்று அறிதல் கட்டாயம்.

அமிழ்து என்பதனை மும்முறை அடுக்கினால் அமிழ்தமிழ்தமிழ்து என்றாகும். பண் இனிமை கருதி நம் மொழிக்குத் தமிழ் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று என்று கொள்வது பொருத்தம்.

தமிழ் என்கின்ற சொல் எவ்வாறெல்லாம் ஆகும் என்று பார்க்க வேண்டும்.

ழ என்ற ஒலிப்பு எல்லார்க்கும் இயல்வதில்லை. பிறமொழியினர்க்கு இது கடினமாகவே இருக்கும்.

இந்த ழகரம் தமிழ்ச் சொற்களிலேயே தனக்கு மாற்றாக டகரத்தைக் கொண்டுவரும்.

குழல் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். நடுவில் உள்ளீடற்று இருக்கும் ஒரு பொருளே குழல் எனப்படுவது. அச்சொல்லிலுள்ள ழ என்ற எழுத்து டகரத்தைப் பெற்றுக்கொள்ளும். இப்போது குழல் என்ற சொல் குடல் என்று ஆகிவிடும்.

குடல் என்ற சொல்லின் பொருளும் அதுதான். நம் உடலில் நடுவழித்துளை அமைந்த உறுப்பு குடல் என்று அறியப்படுகிறது. குழல் என்பதே குடல் ஆகியது.

புழல் என்ற சொல்லுக்கும் உள்துளை அமையப்பட்ட பொருள் என்பதே விளக்கம். புழல் என்பதே புடல் என்றாகியது. புடலை என்று ஒரு காய்க்குப் பெயர். புடலங்காயின் உட்புறம் உள்ளீடற்று இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

குழல் குடல் ஆகும்.
புழல் புடல் ஆகும்.
ழ என்னும் எழுத்து ட ஆகும்.
(அவ்வாறு ஒலிக்கப்படும்)

வகரம் மகரம் ஆவதை நாம் பேச்சு மொழியிலேயே காணலாம். வானம் மானம் என்று சொல்லப்படுகிறது.

அவ்வாறே மகரம் வகரம் ஆவதுமுண்டு. செம்மை என்பது செவ்வை ஆகும். மீசை என்பது வீசை ஆகும். வீசை என்ற சொல்லின் பொருளை அகராதியில் பாருங்கள். வீசை = மீசை என்றே காணப்படும்.

இவ்விளக்கங்கள் யாவும் நான் சொல்வதன்று. நூற்றாண்டுக்கு முன்னம் தமிழின் முதல் மொழிநூலை இயற்றிய மாகறல் கார்த்திகேய முதலியாரும் அவ்வாறே சொல்கிறார்.

மேற்சொன்ன இயல்புகளின்படி, தமிழ் என்பது தமிழம் என்று நிற்கையில் எவ்வாறு மாறும் ?

மி = வி
ழ = ட
மிழ = விட

மிழ என்பது விட என்று நிற்கும்.

த என்ற ஒலிப்பு பிறமொழியில் த்ர என்று ஆகும். பிறமொழி இயல்புகள் அவ்வாறு உள்ளன. தேகம் என்ற சொல் வடமொழியில் திரேகம் என்று ஆவது நல்ல எடுத்துக்காட்டு.

இப்போது மேற்சொன்னவற்றைத் தொகுத்துப் பாருங்கள்.

தமிழ = த்ரவிட

த்ரவிட என்பதனைத் தற்பவமாக்கித் திராவிட என்கிறோம்.

தமிழ் = தமிழம் = த்ரவிடம் = திராவிடம்.

களத்திலுள்ள அரசியல் முரண்களைக் களங்கண்டே தீர்க. சொற்கள் அவற்றுக்குரிய தகைமைகளோடு எஞ்ஞான்றும் வாழும்.

- கவிஞர் மகுடேசுவரன்
#################

ஆக "தமிழ்- தமிழர்" என்பது தூய தமிழ்மொழி உச்சரிப்பின்படி அமைந்த சொல்லாகும்.

"திராவிட-திராவிடர்" என்பது பிற மொழியினர் தமிழ்  என்பதை உச்சரிக்க இயலாமையால் அவர் வழக்கப்படிக் கூறியதை மீண்டும் தமிழ்முறைப்படி எழுதிய சொல்லாகும்.

ஆனாலும் ஒரு செய்தியினைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

திராவிட என்று சொல்லுவது தமிழர்களை மட்டுமே குறிக்கும். அவ்வாறாயின் திராவிட நாகரிகம் என்று சொல்லப் புகுவதும் கூட தமிழர் நாகரிகத்தை மட்டுமே குறிக்கும்.

இப்போது எனக்குள்ள ஐயமெல்லாம்...

"தமிழ்-தமிழர்" என்ற தூய சொல் இருக்கும் போது அதையே பயன்படுத்தலாமே...

பிற மொழியாளர் வாயில் திரிந்து அதன் பின்னர் தமிழ்படுத்திய "திராவிடர்" என்பது எதற்காக?

பருக நன்னீர் இருக்கையில் எவரேனும் கலங்கல் நீரினை அருந்துவரோ?

கனி இருக்க காய் எதற்கு?